உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் குதியில், கட்டுமானப் பணியில் உள்ள வணிக வளாகத்தின் அடித்தளத்தில் இருந்து ஏழு வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர குற்றத்தைச் செய்த நபர், கடந்த சில மாதங்களாக அந்தச் சிறுமியுடன் விளையாடியும், அவளுக்குச் சாக்லேட்டுகள், சிப்ஸ் மற்றும் மிட்டாய்களைத் தொடர்ந்து வாங்கிக் கொடுத்தும் அவளது நம்பிக்கையைப் பெற்றுள்ளார். குழந்தை என்றும் பாராமல் திட்டமிட்டு அவளது நம்பிக்கையைச் சம்பாதித்த அந்த நபர், இறுதியாக அவளை ஆசை வார்த்தைகளைக் கூறித் தனியாக அழைத்துச் சென்று இந்த விபரீதக் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மாயமானது குறித்துப் புகாரளிக்கப்பட்ட நிலையில், தீவிரத் தேடுதலுக்குப் பின்பே அவளது உடல் மீட்கப்பட்டது. குற்றவாளி திட்டமிட்டே சிறுமியின் குடும்பத்தினருக்குத் தெரியாமல் அவளைத் தனது வலைக்குள் வீழ்த்தி, இந்த கொடூரப் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலையைச் செய்திருப்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காசியாபாத் காவல்துறை அதிகாரிகள், தலைமறைவாக உள்ள குற்றவாளியை விரைந்து கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்றுத்தரத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
