லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தனது அபாரமான ஃபீல்டிங் திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர் சினேகா ராணா வீசிய பந்தை, சிலி பாயிண்ட் (Silly Point) பகுதியில் நின்றிருந்த ரிச்சா, மின்னல் வேகத்தில் தனது இடது கையால் பிடித்து இங்கிலாந்து வீராங்கனை மேடி வில்லியர்ஸை பெவிலியன் அனுப்பினார்.
Greatest catch in the history of cricket, because it was taken by Don Richa…..RG13… nobody is near us.. pic.twitter.com/RlnIYCDF8u
— Picasso (@6icasso) July 12, 2026
இந்த மிகக்கடினமான கேட்சைப் பிடித்தபோது ரிச்சாவுக்கு வலி ஏற்பட்டாலும், அவர் அதனைத் துணிச்சலுடன் கையாண்ட விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதோடு, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேட்டிங்கிலும் மிரட்டிய ரிச்சா, இந்தத் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்களைக் குவித்து, இந்திய மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்தாவது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இதன் மூலம், 2024-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தான் படைத்த சாதனையை அவரே முறியடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த வீராங்கனைகள் வரிசையில் சங்கீதா தபீர் (42 பந்துகள்) முதலிடத்திலும், சுபா சதீஷ் (49 பந்துகள்) இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
களத்தில் பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலும் ரிச்சா காட்டிய இந்த அதிரடி ஆட்டம், இந்திய அணியின் வரலாற்று வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.
