காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்ட பாகிஸ்தான் அரசு மீண்டும் ஒருமுறை தனது வழக்கமான பிரசார நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஜூலை 13-ஆம் தேதியை பாகிஸ்தான் அரசு ஆண்டுதோறும் ‘காஷ்மீர் தியாகிகள் தினம்’ என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிரான பிரசார நாளாகக் கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஆகியோர், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின்படி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என உலக நாடுகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மீர் மக்களின் அரசியல் மற்றும் ராஜீய உரிமைகளுக்குப் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்று கூறியுள்ள பிரதமர் செபாஸ் ஷெரீப், தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டுமானால், ஐநா தீர்மானத்தை அமல்படுத்த இந்தியாவுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

மறுபுறம், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான அவதூறுகளைப் பரப்பி வருகிறார். கடந்த 1931-ஆம் ஆண்டு காஷ்மீரில் உயிரிழந்த 22 பேருக்கு அஞ்சலி செலுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், ஜம்மு-காஷ்மீரில் சுமார் 9 லட்சம் இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டு காஷ்மீரிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகத் திரித்துக் கூறியுள்ளார்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை விமர்சித்துள்ள ஜர்தாரி, இது காஷ்மீர் மக்களின் அடையாளத்தைப் பறித்து, அவர்களை சிறுபான்மையினராக மாற்றும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வரும் வேளையில், பாகிஸ்தான் தலைவர்களின் இந்தத் தொடர் புலம்பல்கள், உலக அரங்கில் இந்தியாவின் மீதான அவதூறுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.