இன்று இன்ஸ்டாகிராமில் நீங்கள் தொடும் பக்கமெல்லாம் ஒரு நடுத்தரக் குடும்பத்து இளைஞனின் அசாத்தியமான வெற்றிக் கதை தொடர்பான காணொளி ஒன்று காட்டுத்தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான நெட்டிசன்களால் பகிரப்பட்டு, கோடிக்கணக்கான இளைஞர்களின் நெஞ்சைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் அந்த வைரல் வீடியோவின் நாயகன் வேறு யாருமல்ல; இந்தியாவின் முன்னணி EV ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘ஜிப் எலக்ட்ரிக்’ (Zypp Electric) நிறுவனர் ஆகாஷ் குப்தா (Akash Gupta) தான்!

​வருடத்திற்கு 1 கோடி ரூபாய் சம்பளம். கண்ணைப்பறிக்கும் கார்ப்பரேட் சொகுசு வாழ்க்கை. மாதந்தோறும் வங்கிக் கணக்கில் வந்து விழும் லட்சக்கணக்கான எண்கள். எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் இதுதான் உச்சகட்டக் கனவு. ஆனால், ஆகாஷ் குப்தாவுக்கு அது ஒரு தங்கக் கூண்டாக மட்டுமே தெரிந்தது.

​உடைந்த பெற்றோர் மனம்… உறைந்து நின்ற குடும்பம்!

​தன் கைநிறைய இருந்த அந்த 1 கோடி ரூபாய் வேலைக்கான ராஜினாமா கடிதத்தை ஆகாஷ் நீட்டியபோது, அந்த நடுத்தரக் குடும்பமே உறைந்து போனது. “புத்தி கெட்டுப் போய்விட்டதா உனக்கு?” என்று சுற்றமும் நட்பும் சுடுசொற்களை வீசின. கார்ப்பரேட் உலகில் தன் மகன் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த பெற்றோரின் கண்கள், அதிர்ச்சியிலும் வேதனையிலும் கண்ணீரால் நிரம்பின.

​பெற்றோரின் அந்த ரத்தக்கண்ணீர் ஆகாஷின் நெஞ்சை வதக்கியது. ‘நாம எடுப்பது சரியான முடிவுதானா? அல்லது நடுத்தெருவில் நிற்கப் போகிறோமா?’ என்ற பயம் ஒருபுறம், ‘சாதித்தே தீருவேன்’ என்ற தாகம் மறுபுறம் என ஒரு போர்க்களத்தையே தன் மனதிற்குள் நடத்தினார் ஆகாஷ். நடுத்தரக் குடும்பத்துக்கே உரிய அத்தனை பொருளாதாரப் பயங்களையும் தாண்டி, தன் லட்சியத்தை மட்டுமே கைகளில் ஏந்திக்கொண்டு அந்தப் பாதுகாப்பான வாழ்க்கையை விட்டு வெளியேறினார்.

​பூஜ்ஜியத்தில் தொடங்கிய பயணம்; இன்று இந்தியாவின் அடையாளம்!

​அனைவரும் ‘பைத்தியக்காரத்தனம்’ என்று ஏளனம் செய்த அந்த ஒரு புள்ளிதான், இன்று இந்தியாவின் ‘லாஸ்ட்-மைல் லாஜிஸ்டிக்ஸ்’ (Last-mile logistics) துறையையே புரட்டிப் போட்டிருக்கும் ‘Zypp Electric’ உருவாவதற்கான விதையாக மாறியது.

​சுற்றத்தாரின் கேலிக் பேச்சுகளையும், ஆரம்பகாலத் தோல்விகளையும், மூலதனப் பற்றாக்குறையையும் தன் உழைப்பால் தகர்த்தெறிந்தார் ஆகாஷ். மின்சார வாகனங்கள் (EV) மூலம் விநியோகத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று அவர் நம்பி எடுத்த அந்த ‘ரிஸ்க்’, இன்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாபெரும் சாம்ராஜ்யமாக நிமிர்ந்து நிற்கிறது.

​இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது இந்த வெற்றிக் காணொளி ஒட்டுமொத்த இளைய தலைமுறைக்கும் சொல்லும் பாடம் ஒன்றுதான். வசதியான வாழ்க்கை தரும் தற்காலிகப் பாதுகாப்பை விட, நம் கனவுகள் மீது நாம் வைக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே பேரொளியைத் தரும்.

 

View this post on Instagram

 

A post shared by Startupro (@startupro_official)

​கணக்கிடப்பட்ட ஆபத்துகள் (Calculated Risks) என்றுமே மனிதனை வீழ்த்துவதில்லை; மாறாக, வரலாறு போற்றும் சாதனையாளனாக மாற்றும் என்பதற்கு ஆகாஷின் இந்த பிரம்மாண்ட வெற்றிக் கதையே சாட்சி! அன்று வேதனைப்பட்ட பெற்றோரின் கண்களில் இன்று இருப்பது, உலகமே தன் மகனைப் பார்த்து வியப்பதைக் காணும் ஆனந்தக் கண்ணீர்!