முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவனின் அயர்லாந்து நாட்டு மனைவியான சோஃபி ஷைன், தனது மாமியாரிடம் இருந்து வடஇந்தியாவின் புகழ்பெற்ற உணவான ராஜ்மாவை சமைக்கக் கற்றுக்கொள்ளும் நெகிழ்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அதோடு அந்தப் பதிவில், இந்திய மசாலாப் பெட்டி, கடாயில் ராஜ்மா கொதிக்கும் காட்சிகள் மற்றும் மாமியார் அவருக்கு சமையல் நுணுக்கங்களை பொறுமையாகச் சொல்லித்தரும் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. சோஃபி சமைத்த இந்த ராஜ்மா-சாவலை ஷிகர் தவன் டைனிங் டேபிளில் அமர்ந்து மிகவும் ரசித்து ருசிப்பது போன்ற புகைப்படமும், அதன் பிறகு குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ‘சீப்’ என்ற பாரம்பரிய இந்திய சீட்டாட்டம் விளையாடி மகிழ்ந்த புகைப்படங்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

“>

மேலும் மனைவியின் இந்த சமையல் முயற்சிக்கு ஷிகர் தவன், “ராஜ்மா மிகவும் சுவையாக இருந்தது” என்று நெகிழ்ச்சியோடு கமெண்ட் செய்துள்ளார். ரசிகர்கள் பலரும் “வெவ்வேறு கலாச்சாரங்கள் ஒன்று சேர்வதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றும், “அத்தையின் வழிகாட்டுதலில் நீங்கள் விரைவில் ஒரு பஞ்சாபி மாஸ்டர் செஃப் ஆகிவிடுவீர்கள்” என்றும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் துபாயில் சந்தித்து ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்த ஷிகர் தவனும் சோஃபியும், கடந்த பிப்ரவரி 21, 2026 அன்று டெல்லியில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.