மத்தியப்பிரதேச மாநிலம் ராய்சென் மாவட்டத்தில் உள்ள கர்மோடியா கிராமத்தில், மோட்டார் திருடியதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கம்பத்தில் கட்டப்பட்டு, மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தனியாகேடி கிராமத்தைச் சேர்ந்த பைராகி சமூகத்தினர் ஆவர். காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு மின் சாதனத்தைக் கொண்டு, அவர்கள் மீது இந்த அராஜகம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

“>

இந்தத் தாக்குதல் மற்றும் சித்திரவதையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையையும், பொதுமக்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்தக் கொடூரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து, தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராய்சென் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த அநாகரிகமான தாக்குதலில் ஈடுபட்டதாக ஜித்தேந்திர தாக்கூர் மற்றும் பன்வர்லால் தாக்கூர் ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோவில் இருக்கும் மற்ற நபர்களை அடையாளம் காணும் பணிகளும், இந்தச் சம்பவம் குறித்த விரிவான விசாரணையும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.