கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 உறுப்பினர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், முதலமைச்சர் விஜய் இன்னும் சினிமா படப்பிடிப்பில் இருப்பது போலவே பொதுவெளியில் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கரூரில் நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுகள் அனைத்தும் வழக்கமான ஒரு ‘ஸ்கிரிப்ட்’ தான் என்றும், அதில் புதிதாக எதுவும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், “ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவோம் என்று தவெக கொடுத்த வாக்குறுதி தற்பொழுது என்ன ஆனது?” எனக் கேள்வி எழுப்பினார். குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், விவசாயிகளின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து முதலமைச்சர் ஏதேனும் பேசினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “மக்களுக்காகத் தனது சொந்தப் பணத்தை அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் தான் மக்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே முதலமைச்சர் விஜய் நேற்று அவ்வாறு பேசியுள்ளார் என்று சாடினார். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது சொந்தப் பணத்தில் இருந்து தலா ரூ.1 கோடி வழங்கியிருக்கலாம் என்றும், அந்தப் பணத்தின் வட்டியை வைத்தே அக்குடும்பங்கள் நன்றாக வாழ்ந்திருக்க முடியும் என்றும் கூறினார்.

அதை விடுத்து, ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல’ தற்பொழுது அரசுப் பணிகளை தூக்கிக் கொடுத்துள்ளதாகவும், இது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக இரவு பகலாகப் படித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஊழல்வாதிகளைத் தனது அருகிலேயே வைத்துக் கொண்டு, மேடையில் ஊழலை ஒழிப்பதாக முதலமைச்சர் விஜய் பேசுவது வேடிக்கையாக உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.