ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரின் கோட்வாலி காவல் எல்லைக்குட்பட்ட கடானா பகுதியில், 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர் தனியாக வசித்து வந்தார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் தொழில் செய்து வந்த இவர், தனது வீட்டில் எப்போதும் கணிசமான தொகையை வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தினமும் இரவு நேரத்தில் தனது மகன் விகாஸ் அகர்வால் வீட்டிற்குச் சென்று உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்த தினேஷ், கடந்த வியாழக்கிழமை இரவு நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.
அங்கு வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு, பீரோக்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மற்றொரு அறையில் தினேஷ் சந்திர அகர்வால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் மூடப்பட்ட நிலையிலும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார்.
நள்ளிரவில் வீட்டின் பின்வாசல் வழியாகப் புகுந்த மர்மக் கும்பல், முதியவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், உடலை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் டீகாராம் ஜூலி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அரசுக்குக் கடுமையான கோரிக்கை விடுத்துள்ளார்.
