ஹரியானா மாநிலம் ரோத்தக்கில், தனது 4 வயதுப் பெண் குழந்தையைத் தந்தை ஒருவர் மிகக் கொடூரமாகத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற ஜிதேந்திரா என்ற நபரை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் நிலையத்தில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜிதேந்திரா, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சுரபி என்ற அந்த 4 வயதுச் சிறுமி, தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் அருகில் உள்ள ஒரு பிறந்தநாள் விழாவுக்குச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த ஜிதேந்திரா, அந்தச் சிறுமியைப் பிடித்து நடுரோட்டில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். சிசிடிவி காட்சிகளில், அவர் குழந்தையை மீண்டும் மீண்டும் அடிப்பதோடு, மிகக் கொடூரமாகச் சாலையிலேயே தூக்கி வீசும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதைப் பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவரைத் துரத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், இரவோடு இரவாகத் தேடுதல் வேட்டை நடத்தி அவரைச் சிறை பிடித்தனர்.
हरियाणा – रोहतक में शराब के नशे में धुत पिता ने हैवानियत की सारी हदें पार कर दीं, 4 साल की मासूम बेटी को उठाकर सड़क पर पटक दिया और थप्पड़ भी मारे, घटना के समय बच्ची की मां पड़ोस में जन्मदिन समारोह में गई थी, पूरी वारदात सीसीटीवी में कैद होकर वायरल हो गई।
कंधे में फ्रैक्चर आने के… pic.twitter.com/W1sLqW8G8n
— Shakti Singh/शक्ति सिंह (@singhshakti1982) July 9, 2026
கைது செய்யப்பட்ட பின்னர், தான் தனது வாழ்க்கையிலேயே மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டதாகவும், இதற்காக வெட்கப்படுவதாகவும் ஜிதேந்திரா மன்னிப்புக் கோரியுள்ளார். இதற்கிடையே, தன் கணவர் மட்டுமே குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரம் என்றும், அவர் சிறைக்குச் சென்றால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறி, அவருக்குக் குறைந்தபட்சத் தண்டனை வழங்குமாறு சிறுமியின் தாய் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், ஒரு மைனர் குழந்தைக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறை மிகக் கொடூரமான குற்றம் என்றும், சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்யும் என்றும் போலீஸார் திட்டவட்டமாகத் தெரிவித்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
