நம்முடைய நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும்போது, நம்மையறியாமலேயே நம் கண்களில் கண்ணீர் பெருகிவிடுகிறது. அது வெறும் கண்ணீர் அல்ல; அந்தக் கனவை அடைவதற்காக நாம் கடந்து வந்த கடினமான பாதையையும், இரவு பகலாகச் சிந்திய உழைப்பையும் நினைவூட்டும் ஒரு உணர்ச்சிப் போராட்டமாகும். குறிப்பாக, அந்தக் கனவு நம்முடைய சிறுவயது ஏக்கங்களுடன் தொடர்புடையதாக இருக்கும்போது, அதன் மதிப்பு இன்னும் பன்மடங்கு அதிகமாகிறது. அவ்வாறு, தங்களின் கடந்த காலக் கஷ்டங்களையும் பலவீனங்களையும் உலகிற்குச் சொல்லப் பலர் தயங்கும் இந்தச் சூழலில், கனடாவில் வசித்து வரும் இந்தியத் தொழிலதிபரான ஆஷ் லம்பாதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உருக்கமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ஆஷ் லம்பா விமானத்தின் ‘பிசினஸ் கிளாஸ்’ இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியே பார்த்தபடி கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, “நான் விமானத்தில் ஒரு ஜாலியான வீடியோவைத்தான் எடுக்க நினைத்தேன். ஆனால், கேமராவை ஆன் செய்தவுடன் என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுவயதில் எனது பள்ளி நண்பர்கள் லண்டனுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு வந்து தங்களின் சொகுசு வாழ்க்கை, ஆடம்பரக் கார்கள், ரோலக்ஸ் போன்ற பிராண்டட் வாட்ச்கள் மற்றும் பிளாக் பெர்ரி போன்கள் குறித்துப் பேசும்போது நான் ஏக்கமாகப் பார்ப்பேன். எனது பெற்றோர் எனக்கு அன்பான ஒரு குழந்தைப்பருவத்தைத் தந்த போதிலும், இந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும், என் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது.

விமானத்தில் பயணம் செய்யும்போது பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்காகவே, நான் வேண்டுமென்றே கழிவறைக்குச் செல்பவன் போல அந்தப் பகுதியைக் கடந்து எட்டிப் பார்ப்பேன். இன்று அதே பிசினஸ் கிளாஸ் இருக்கையில் நான் அமர்ந்திருக்கும்போது, என் வயது முதிர்ந்த மனம் அழவில்லை; எனக்குள் இருந்த அந்த ஏழைச் சிறுவன் தான் தன் கனவு நிறைவேறியதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை விண்டோ சீட்டில் அமர்ந்து அவர் பதிவிட்டதைத் தொடர்ந்து, அவரது விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் பாராட்டி நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ash Lamba (@ashtalksentrepreneurship)