இந்திய ரயில்வேயின் ஒருங்கிணைந்த ‘Rail One’ செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளில் போலிப் பதிவுகளைத் தடுத்து, முறைகேடுகளை ஒழிக்கும் பொருட்டு டிக்கெட் பரிசோதனை முறையில் ரயில்வே நிர்வாகம் புதிய அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்திப் போலி டிக்கெட்டுகள் தயாரிப்பது மற்றும் ஒரே டிக்கெட்டின் புகைப்படங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துவது போன்ற புகார்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிஜிட்டல் முறையில் முன்பதிவில்லா மற்றும் இதர டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகள் இனி ‘Rail One’ செயலியின் உள்ளே இருக்கும் அசல் (Original) டிக்கெட்டை மட்டுமே பரிசோதனையின் போது காண்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாட்டின்படி, பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பகிர்வதோ, ஸ்கிரீன்ஷாட் எடுத்தோ, பிடிஎஃப் வடிவத்திலோ அல்லது புகைப்படங்களாகவோ காண்பித்தால் அது செல்லாத டிக்கெட்டாகவே கருதப்படும். எந்தவொரு கைபேசியில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதோ, அதே கைபேசியில் உள்ள அசல் செயலியின் மூலம் மட்டுமே டிக்கெட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அவர்கள் டிக்கெட் இன்றி பயணித்ததாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ரயில் நிலையத்திற்கு வெளியே அல்லது ரயில் புறப்படுவதற்கு முன்பாக மட்டுமே டிஜிட்டல் டிக்கெட்டுகளை எடுக்க வேண்டும் போன்ற விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. போலி டிக்கெட் பயன்பாட்டைக் குறைத்து, உண்மையான பயணிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
