அமெரிக்காவின் புறநகர்ப் பகுதியான கில்பர்ட்டில் உள்ள ஒரு வீட்டின் பின்பக்க நீச்சல் குளத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 18 மாதக் குழந்தையான வின்சென்ட் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவசரக்கால மீட்புப் படையினர் குழந்தைக்கு முதலுதவி அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அந்த சமயத்தில், குழந்தையின் உடம்பில் உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிவதாக அங்கிருந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் கூறியபோது, “நான் காரணத்தோடுதான் மெடிக்கல் காலேஜ் படித்து மருத்துவர் ஆனேன், தயவுசெய்து உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள், என் வேலையை நான் பார்க்கிறேன்” என்று கூறி அந்த மருத்துவர் போலீசாரை அடக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இறந்ததாகக் கருதப்பட்ட அந்தக் குழந்தை மருத்துவமனையின் பிணவறையில் உள்ள குளிர் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு, குழந்தையின் உடற்கூறாய்வு மற்றும் மரணத்தை உறுதி செய்வதற்காக உள்ளூர் மருத்துவப் பரிசோதகர் குழு அந்த பிணவறைக்குச் சென்றது. அப்போது, அங்குள்ள குளிர் அறையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தை திடீரென மூச்சு விடுவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்தப் பரிசோதனைக் குழுவினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்து, குழந்தையை மின்னல் வேகத்தில் மற்றொரு மருத்துவமனைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின், அந்த குழந்தை நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த போலீஸ் ஆவணங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவத்தில் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில், இந்த மிகப்பெரிய மருத்துவத் தவறு குறித்து முழுமையான மறுஆய்வு செய்து வருவதாக சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
