ஜிம்பாப்வே நாட்டுக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அணியில், டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் நாயகனாகக் கொண்டாடப்பட்ட நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்களிடையேயும், முன்னாள் வீரர்களிடையேயும் பிசிசிஐக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முதல் போட்டியிலும் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பியதே அவர் நீக்கப்பட்டதற்குக் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த மூன்று டி20 போட்டிகளில் அயர்லாந்துக்கு எதிராக 5 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 1 ரன்னும் மட்டுமே எடுத்து அவர் ஏமாற்றமளித்திருந்தார்.
இருப்பினும், சஞ்சு சாம்சன் நீக்கத்திற்கான உண்மையான காரணத்தை பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் அறிக்கை வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள தகவலின்படி, ஜிம்பாப்வே தொடரில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கவே தேர்வுக்குழுவினர் விரும்பியதாகவும், ஒருவேளை சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு கிடைத்திருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளதால், அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே இந்த ஜிம்பாப்வே தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த இந்திய அணி, வரும் ஜூலை 23, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஹராரே மைதானத்தில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளவுள்ளது.
