உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டம் துல்லஹ்பூர் பகுதியில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பணத்திற்காகச் சொந்த மகளின் கற்பை வியாபாரமாக்க முயன்றுள்ளார் ஒரு சித்தி.

துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, அவரது சொந்த சித்தியான புஷ்பா தேவியும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும் சேர்ந்து கடந்த சில நாட்களாக மூளைச்சலவை செய்து வந்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட வேலைக்காக 80 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணுக்கு வலை வீசியுள்ளனர். அதில் 20 லட்சம் ரூபாய் நேரடியாக அந்தப் பெண்ணுக்கும், மீதித் தொகை சித்தி மற்றும் அவரது கூட்டாளிக்கும் பிரித்துத் தரப்படும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். மேலும், இந்த விபரத்தை வீட்டில் யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண், அது என்ன வேலை என்று சித்தியிடம் துருவித் துருவிக் கேட்டுள்ளார். அப்போது, “உன்னை அழைத்துச் செல்ல ஒரு கார் வரும். அதில் ஏறி பக்கத்து மாவட்டமான அசம்காருக்குச் செல்ல வேண்டும்.

அங்கு ஒரு மணி நேரம் மட்டும் இருந்துவிட்டுத் திரும்பி வரலாம்” என்று கூறியுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 20 லட்சம் ரூபாய் தரும் அளவுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்டபோது, அங்கு ஆபாசமான காரியங்களில் ஈடுபட வேண்டும் என்ற கொடூர திட்டத்தை புஷ்பா தேவி உடைத்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக மறுப்புத் தெரிவித்துவிட்டுத் தனது பெற்றோரிடம் விபரத்தைக் கூறியுள்ளார். தொடர்ந்து, காவல் நிலையம் சென்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள சித்தி மற்றும் அந்த இளைஞன் மீது காவற்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.