தமிழகத்தில் தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்குவது முற்றிலும் உறுதி என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவசக் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், தவெக தேர்தல் வாக்குறுதியின்படி பெண்களுக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்று பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், “முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உரிமைத்தொகை தற்போது எவ்வித தடையுமின்றி தவெக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதியின்படி, 60 வயது வரையுள்ள தகுதியான அனைத்து மகளிர்களுக்கும் இந்த உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி விரைவில் வழங்கப்படும்” என்று உறுதியளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அமைச்சர், நிதிநிலை பற்றாக்குறைகள் இருந்தாலும் குடும்பத் தலைவிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கான இந்தத் திட்டம் எவ்வித தொய்வுமின்றி கண்டிப்பாக, உறுதியாகச் செயல்படுத்தப்படும் என்றும், இதில் பொதுமக்களுக்கு எந்தவித ஐயமும் தேவையில்லை என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.