தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அசுர வளர்ச்சி, எதிர்க்கட்சியான திமுகவிற்குள் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் முக்கிய வாரிசுகளும், மூத்த நிர்வாகிகளும் அடுத்தடுத்து தவெக பக்கம் தாவி வருவது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் கலக்கத்தைக் கொடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்று ஒரே நாளில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், திமுக இலக்கிய அணி செயலாளர் வி.பி.கலைவாணன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ கருணாநிதி ஆகியோர் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்து திமுக முகாமிற்கு செம ஷாக் கொடுத்துள்ளனர். ஏற்கனவே திமுகவின் முக்கிய முகமான எம்பி திருச்சி சிவாவின் மகள் காயத்ரியும் ஆளும் கட்சியான தவெகவில் இணைந்திருந்த நிலையில், இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் திமுக தலைமையைக் கடுமையான யோசனையில் ஆழ்த்தியுள்ளது.
தவெகவில் இணைந்த பலரும், “திமுக தலைமை மீதுள்ள அதிருப்திதான் இதற்கு காரணம்” என்று தங்களது குமுறல்களை வெளிப்படையாகவே கொட்டி தீர்த்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இடங்களிலிருந்தே முக்கியப் புள்ளிகள் விலகி விஜய்யின் தவெகவில் ஐக்கியமாவது தமிழக அரசியலில் சும்மா காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
