மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கஜ்ரானா பகுதியில், வெறும் காகிதத்தில் மட்டுமே இயங்கி வரும் ஒரு ‘பேய் மருத்துவமனை’ பற்றிய விபரங்கள் பெரும் நிர்வாகச் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் இப்பகுதிக்காக 100 படுக்கைகள் கொண்ட சிவில் மருத்துவமனை ஒன்றைக் கட்ட அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்தும் இதுவரை அதற்கான நிலம் கையகப்படுத்தப்படாமலும், எந்தவொரு கட்டிடமும் கட்டப்படாமலும் உள்ளது.

இதனால் வியப்பு என்னவென்றால், நிஜத்தில் இல்லாத இந்த மருத்துவமனைக்கு நிபுணத்துவ மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் என மொத்தம் 87 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, தொடர்ந்து அதிகாரிகள் மூலம் ஆட்களை நியமிப்பதும், பணியிட மாறுதல்கள் செய்வதும் காகித அளவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.

தற்போது இந்த மருத்துவமனையின் பெயரில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும், இந்தூரில் உள்ள சஞ்சீவினி கிளினிக்குகள் மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர்.

அதோடு நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதமே கட்டுமானப் பணி தொடங்காததற்குக் காரணம் என்றும், ஆன்லைன் போர்ட்டலில் இந்த விபரங்கள் இன்னும் புதுப்பிக்கப்படாததால் காகித அளவில் இந்த இடமாற்றங்கள் தொடர்வதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளனர்.

எனினும், நிஜத்தில் ஒரு செங்கல் கூட வைக்கப்படாத ஒரு மருத்துவமனைக்கு தொடர்ந்து ஊழியர்களை மாற்றி வருவது மிகப்பெரிய நிர்வாகக் குளறுபடி மற்றும் ஊழல் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.