உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவின் ரேணுகா தாம் காலனியில், ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய கொடூர கொலைச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த மே 18-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுரேந்திர குமார் சர்மா (44) என்ற நபர், அவரது சொந்த வீட்டு பாத்ரூம் தரைக்கு அடியில் பிணமாகப் புதைக்கப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரேந்திர குமார் காணாமல் போனது முதல், “என் கணவர் எங்கோ சென்றுவிட்டார், சீக்கிரம் வந்துவிடுவார்” என்று அவரது மனைவி ரூபி குடும்பத்தினரிடம் தொடர்ந்து நாடகமாடி வந்துள்ளார். மேலும், கடந்த மே 26 அன்று கணவரைக் காணவில்லை என்று போலீசிலும் அவரே புகாரளித்துள்ளார். உறவினர்களும் போலீசாரும் இரவு பகலாக சுரேந்திரனைத் தேடி வந்த நிலையில், ரூபியின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று போலீசார் சுரேந்திரனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியபோது ரூபியின் பதற்றமான நடத்தை போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அதே நேரத்தில், சுரேந்திரனின் சகோதரர் அனில் சர்மாவும் சில முக்கியத் தகவல்களை போலீசாரிடம் பகிர்ந்துள்ளார். இதையடுத்து வீட்டைச் சோதனையிட்ட போலீசாரின் பார்வை பாத்ரூமில் புதிதாகப் போடப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சின் மீது விழுந்தது.
சந்தேகத்தின் பேரில் அந்த இடத்தை தோண்டியபோது, உள்ளே அழுகிய நிலையில் சுரேந்திரனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுரேந்திரனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக தம்பதியிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததும், இதனால் ஆத்திரமடைந்த ரூபி, கணவரைக் கொலை செய்துவிட்டு, உடலை மறைக்க முன்கூட்டியே கொத்தனாரை வரவழைத்து பாத்ரூம் தரையைத் தோண்டி புதைத்ததும் தெரியவந்துள்ளது. தற்போது ரூபியைக் கைது செய்துள்ள போலீசார், இந்த கொடூரக் கொலையில் அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
