கடவுள் பூமியில்தான் மனிதர்கள் ரூபத்தில் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது சேர்ந்த சினோஜ் (43) என்ற லாட்டரி கடைக்காரருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரே காரை ஓட்டிக்கொண்டு ஹாஸ்பிட்டல் கிளம்பியுள்ளார். ஆனால், காலாடி பாலம் அருகே கடுமையான டிராஃபிக் ஜாம் ஏற்பட்டதால் வண்டி நகரவே இல்லை. நெஞ்சு வலி அதிகமானதில் மூச்சு திணறி காரின் ஸ்டீயரிங் வீலிலேயே சினோஜ் மயங்கி விழுந்து மரணத்தின் விளிம்பிற்குச் சென்றுள்ளார்.
காரைச் சுற்றி மக்கள் கூடி என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அந்தச் சமயத்தில், அதே வழியில் வந்த பஸ்ஸில் நர்ஸ் அஞ்சலி பைஜூ மற்றும் பெங்களூரு நர்ஸிங் மாணவி ஆர்த்ரா ராஜ் ஆகியோர் பயணம் செய்துள்ளனர். கூட்டத்தையும், காரில் ஒருவர் மயங்கிக் கிடப்பதையும் ஜன்னல் வழியாகப் பார்த்த இருவரும், பஸ் முழுமையாக நிற்பதற்குக்கூட காத்திராமல் ஓடும் பஸ்ஸிலிருந்தே சட்டென கீழே இறங்கி காரை நோக்கி ஓடிவந்துள்ளனர்.
அங்கு வந்து பார்த்தபோது சினோஜுக்கு நாடித் துடிப்பு மிக மோசமாக குறைந்திருந்தது. சிறிதும் தாமதிக்காமல் அந்த இரண்டு நர்ஸ்களும் சினோஜை காரின் சீட்டிலிருந்து தூக்கி, அங்கேயே உடனடியாக சிபிஆர் (CPR) கொடுக்கத் தொடங்கினர். இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்களும் உதவ முன்வந்து, காரின் ஸ்டீயரிங்கை பிடித்து ஹாஸ்பிட்டல் நோக்கி ஓட்ட, மற்றவர்கள் டிராஃபிக்கை க்ளியர் செய்து வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். கார் ஹாஸ்பிட்டல் போய்ச் சேரும் வரை காரின் உள்ளேயே சினோஜுக்கு அஞ்சலியும் ஆர்த்ராவும் தொடர்ந்து சிபிஆர் கொடுத்துக் கொண்டே இருந்துள்ளனர்.
கார் ஹாஸ்பிட்டல் சேர்ந்ததும், நர்ஸ்கள் கொடுத்த சிபிஆர் காரணமாக சினோஜின் இதயம் மற்றும் மூளைக்கு ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் இருந்தது தெரிந்தது. உடனே டாக்டர்கள் அவருக்கு எமர்ஜென்சி பிரிவில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைத்தனர். தற்போது சினோஜ் நலமாக உள்ளார். அந்த நர்ஸ்கள் மட்டும் சரியான நேரத்தில் சிபிஆர் கொடுக்கவில்லை என்றால், சினோஜ் ஹாஸ்பிட்டல் வரும் முன்பே இறந்திருப்பார் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆபத்தான நேரத்தில் சுயநலமில்லாமல் ஓடிவந்து உயிர்காத்த இந்த இரண்டு நர்ஸ்களின் மனிதாபிமானத்திற்குத் தேசமே பாராட்டு தெரிவிக்கிறது.
