பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான தக்சசீலாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையிலான நவீன மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஐக்கிய நாடுகள் சபை பாகிஸ்தான் அரசுக்குக் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தெற்காசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக விளங்கும் தக்சசீலா, ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களிலும், வேத கால மற்றும் காந்தார வரலாற்றிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த வளாகத்திற்குள் அமைந்துள்ள ‘மோஹ்ரா மெராடு’ மற்றும் ‘சிர்காப்’ ஆகிய பழங்காலத் தொல்பொருள் பிரிவுகளின் சுவர்கள் மற்றும் கட்டுமானங்களில், சமீபகாலமாகப் பெரிய அளவில் தேவையற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டு இருப்பதைச் சமீபத்திய புகைப்படங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
பழங்கால உலக பாரம்பரிய தளங்களைப் பராமரிக்கும் போது நவீன சிமெண்ட் போன்ற செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவது, சர்வதேச பாதுகாப்பு விதிகளை முழுமையாக மீறும் செயல் என்று பாகிஸ்தான் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை நிபுணர்களே தங்களது எச்சரிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தக்சசீலத்தில் புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் ‘தேவையற்ற தலையீடுகளை’ பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தவறினால் அதன் மதிப்புமிக்க உலக பாரம்பரிய தளம் என்ற அந்தஸ்தை அது இழக்க நேரிடும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
மேலும், சர்வதேச விதிகளை மதித்து இந்த மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாகத் திரும்பப் பெறத் தவறினால், தக்சசீலா வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தும் யுனெஸ்கோவின் ‘அபாயத்தில் உள்ள உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில்’ சேர்க்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை பாகிஸ்தானுக்குக் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
