இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய அணியுடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் இடம் பெற்றிருந்தும், கடந்த மூன்று போட்டிகளாக இவருக்கு லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சக வீரர்களுடன் நேரத்தை செலவிட்டு வரும் வைபவ் சூர்யவன்ஷி, சமூக ஊடகத்தில் செய்த ஒரு சிறிய தவறால் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, லைலா பைசல் என்பவரை காதலித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இருவரும் லண்டனில் ஒன்றாக இருக்கும் சமயத்தில் அபிஷேக் தனது காதலி குறித்து வைபவிடம் பகிர்ந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆர்வமடைந்த வைபவ் சூர்யவன்ஷி, இன்ஸ்டாகிராமில் லைலாவின் புரோஃபைலைத் தேடிப் பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக லைலாவின் பதிவு ஒன்றை தவறுதலாக ‘ரீ-போஸ்ட்’ செய்துள்ளார். இதனை கவனித்த ‘X’ பயனர் ஒருவர், வைபவின் இன்ஸ்டா பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டை ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளதால் இந்த விவகாரம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

 

மறுபுறம், இங்கிலாந்துக்கு எதிரான செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் போட்டியில் விளையாடாத வைபவ் சூர்யவன்ஷிக்கு, ஜூலை 4-ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 2-வது டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. கடந்த மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து தொடர்ந்து சொதப்பி வரும் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக, சூப்பர் ஃபார்மில் இருக்கும் இடதுகை ஓப்பனரான வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களும் வைபவை ஆடும் லெவனில் சேர்க்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, அடுத்த போட்டியில் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் இன்னிங்ஸைத் தொடங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.