அண்டார்டிகாவின் டெய்லர் பனியாற்றில் இருந்து வடியும் இரத்த நிறத்திலான நீர்வீழ்ச்சி, ‘பிளட் ஃபால்ஸ்’ என்று அழைக்கப்படுகிறது.
1911 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய புவியியலாளர் கிரிஃபித் டெய்லர் என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த விசித்திரமான சிவப்பு நிற நீர்வீழ்ச்சி, கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகளுக்கு ஒரு பெரிய புதிராகவே இருந்து வந்தது.
மேலும் ஆரம்பத்தில் இதற்கு சிவப்பு பாசிகள்தான் காரணம் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, இந்த பனியாற்றின் அடியில் சுமார் 400 மீட்டர் ஆழத்தில், 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டிகளுக்குள் சிக்கிய ஒரு பழங்கால உப்பு நீர் ஏரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஏரிநீரில் இரும்புச்சத்து மிக அதிகளவில் நிறைந்துள்ளது.
இதனால் பனியாற்றின் நகர்வினால் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக, பனிப்பாறைகளுக்குள் இருக்கும் மறைமுகமான பாதைகள் வழியாக இந்த நீர் வெளியேறி, வளிமண்டலத்திலுள்ள ஆக்ஸிஜனுடன் வினைபுரியும் போது இரும்பு ஆக்சைடாக மாறி இந்த அடர் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது.
கடும் குளிரான அண்டார்டிகா பகுதியில் இந்த நீர் உறைந்து போகாமல் தொடர்ந்து திரவ வடிவில் பாய்வதற்கு, அதில் உள்ள மிக அதிகமான உப்புத்தன்மையே முதன்மைக் காரணமாகும். சாதாரண கடல்நீரை விட பல மடங்கு அதிக உப்புத்தன்மை கொண்டிருப்பதால், இதன் உறைநிலை சாதாரண தண்ணீரை விட மிகக் குறைவாக உள்ளது.
மேலும், ரேடார் இமேஜிங் மற்றும் நுண்ணோக்கி ஆய்வுகளின்படி, சூரிய ஒளி மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத இந்த தீவிரமான சூழலிலும் பல மில்லியன் ஆண்டுகளாக உயிர்வாழும் பழங்கால நுண்ணுயிரிகள் இந்த ஏரிநீரில் இருப்பதைக் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பானது பூமியின் சுற்றுச்சூழல் வரலாற்றை அறிந்துகொள்ள உதவுவதோடு மட்டுமன்றி, செவ்வாய் கிரகம் அல்லது வியாழனின் நிலவான யுரோப்பா போன்ற பனிக்கட்டிகளால் சூழப்பட்ட பிற விண்வெளி உலகங்களில் உயிரினங்கள் எவ்வாறு வாழக்கூடும் என்பதை ஆராய்வதற்கும் விஞ்ஞானிகளுக்கு ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைந்துள்ளது.