பாகிஸ்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியின் சமீபத்திய சுமாரான ஆட்டங்கள் மற்றும் தனது பயிற்சியாளர் பதவி குறித்து எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களுக்கு அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பாகிஸ்தான் வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமை முடித்த பின் பேசிய அவர், பாகிஸ்தான் அணி வீழ்ச்சியை நோக்கிச் செல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். “கடந்த ஆண்டு நடந்த ஆசியக் கோப்பை தொடரில், பரம எதிரியான இந்தியாவிற்கு எதிரான போட்டிகளைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
தற்போதைய சூழலில் உலக அளவில் இந்திய அணியை வீழ்த்த அனைத்து அணிகளுமே திணறி வருகின்றன. அது பாகிஸ்தானுக்கு மட்டுமேயான பின்னடைவு அல்ல. நியாயமோ, அநியாயமோ… பாகிஸ்தான் அணியின் தரம் என்பது இந்தியாவுக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்தே இங்கு எடைபோடப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் இந்தியா இப்போது உலகின் சிறந்த அணியாக மட்டுமல்ல, மற்ற அணிகளை விட பல மைல்கள் முன்னிலையில் உள்ள ஒரு அசைக்க முடியாத அணியாகத் திகழ்கிறது” என்று மைக் ஹெஸன் யதார்த்தத்தைப் பேசியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னேற்றம் என்பது அதன் சமீபத்திய ஒட்டுமொத்த முடிவுகளில் தெளிவாகத் தெரிகிறது என்று மைக் ஹெஸன் சுட்டிக்காட்டியுள்ளார். ஐசிசி (ICC) தொடர்களில் திடீரென கோப்பையை வெல்வதற்கு முன்பாக, அணி முதலில் போட்டிகளில் தொடர் வெற்றிகளைப் பெற பழக வேண்டும் என்று கூறிய அவர், சில முக்கிய புள்ளிவிவரங்களையும் முன்வைத்தார். “கடந்த டி20 உலகக் கோப்பையில், ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் இங்கிலாந்திடம் தோற்றோம். அதைத் தவிர இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் வென்றோம்.
கடந்த 2023 முதல் 2025 வரை ஐசிசி தொடர்களில் குரூப் சுற்றைத் தாண்டாத பாகிஸ்தான் அணி, தற்போது 20 சதவீத வெற்றிகளில் இருந்து ஒரு வருடத்தில் 75 சதவீத வெற்றிகளை நோக்கி முன்னேறியுள்ளது சாதாரண விஷயமல்ல” என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மைக் ஹெஸன் பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தான் அணி இரண்டு டி20 முத்தரப்பு தொடர்களை வென்றுள்ளதுடன், ஆடிய 6 இருதரப்பு தொடர்களில் ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கடந்த 2025 ஆசியக் கோப்பையில் குரூப் சுற்று, சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டி என மூன்று முறையும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இறுதிப்போட்டியில் 113 ரன்களுக்கு 1 விக்கெட் என்று வலுவான நிலையில் இருந்த பாகிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி கோப்பையைத் தாராளமாக இந்தியாவிடம் பறிகொடுத்தது மைக் ஹெஸன் மீதான விமர்சனங்களை இன்னும் அதிகரித்துள்ளது.
