பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் அதிரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் சோசியல் மீடியா பக்கங்களிலும் மிகப்பெரிய புயலையும் அனல் பறக்கும் விவாதத்தையுமே கிளப்பியுள்ளது. ‘VB-GRAMG’ திட்டத்தின் சில விதிகளில் முக்கிய மாற்றங்களையும், தளர்வுகளையும் கொண்டு வருவது  அவசியம் என்று முதல்வர் விஜய் தனது கடிதத்தில் மிகத் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.

தற்பொழுது இந்தத் திட்டத்திற்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்குவதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று அவர் அதிரடி டிமாண்ட் வைத்துள்ளார். இந்த தற்போதைய நிதிப் பகிர்வு முறையால் தமிழகத்திற்குச் சுமார் 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் நிதிச் சுமை ஏற்படுவதால், மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் என்கிற 75:25 வீதத்தில் நிதியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஓப்பனாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஊழியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு மத்திய அரசே 100 சதவீத நிதியுதவியைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும், இந்தத் திட்டத்தை எப்போதும் போல மகாத்மா காந்தியின் பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.