அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். திமுக அரசுக்கு எதிராக மக்களிடையே கொழுந்துவிட்டு எரிந்த அதிருப்தி மனநிலையே விஜய்யின் விஸ்வரூப வெற்றிக்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “அரசியலில் விஜய் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்த்தேன், ஆனால் கொங்கு மண்டலத்தில் கிடைத்த பிரம்மாண்ட ஆதரவால் இவ்வளவு பெரிய வாக்கு சதவீதத்தையும் வெற்றியையும் அவர் பெறுவார் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை” என அண்ணாமலை ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
பணபலம் மற்றும் சாதியக் கட்டமைப்புகளை உடைத்தெறிய மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு சினிமா நட்சத்திரம் தேவைப்பட்ட நிலையில், விஜய் அந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்று பாராட்டியுள்ள அவர், அரசியலுக்குப் புதியவரான முதல் அமைச்சர் விஜய்க்குத் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளக் குறைந்தது ஒரு வருட கால அவகாசமாவது வழங்கப்பட வேண்டும் என்றும், விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பு விஜய்யைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, அவர் வெற்றி பெற்றவுடன் பதவிகளுக்காகக் கூண்டோடு கட்சி தாவுபவர்களைக் கடுமையாகச் சாடியுள்ள அண்ணாமலை, இதுபோன்ற சந்தர்ப்பவாத அரசியலே தேவையற்ற இடைத்தேர்தல்களுக்கு வித்திடுவதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தான் முன்னெடுத்து வரும் புதிய அரசியல் இயக்கம் குறித்துப் பேசிய அவர், “தற்போது எங்கள் இயக்கத்தில் 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர்; இந்த எண்ணிக்கை 50 லட்சத்தைத் தொட்ட பிறகே அரசியல் கட்சியாக மாறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” என அதிரடியாக அறிவித்துள்ளார்.
தங்கள் இயக்கத்தின் பாதை தவெக-விலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை உள்ளடக்கிய தூய்மையான அரசியலையே தாங்கள் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதேசமயம், “ஒருவேளை அதிமுக – பாஜக – தவெக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி அமைத்திருந்தால், அது திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்திருக்கும்; தேர்தல் என்பது வெறும் எண்களின் கூட்டல் கழித்தல் அல்ல, மக்களுடனான அரசியல் ‘கெமிஸ்ட்ரி’தான் வெற்றியைத் தீர்மானிக்கும்” என அண்ணாமலை உதிர்த்துள்ள அரசியல் தத்துவங்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளன.
