இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது 15 வயதே ஆன இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் சர்வதேச அறிமுகம் பற்றியதுதான். அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, சூர்யவன்ஷியை அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ரசிகர்கள் மற்றும் மீடியாக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளன. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், சூர்யவன்ஷியின் அறிமுகம் குறித்தே கேள்விகள் எழுப்பப்பட்டன. செய்தியாளர் ஒருவர், “இப்போது எங்கு பார்த்தாலும் வைபவ்… வைபவ் என்றுதான் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது, இது பயிற்சியாளருக்கும் உங்களுக்கும் ஷ்ரேயஸ் ஐயரிடம் எவ்வளவு கடினமாக உள்ளது?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. நான் செய்திகளையோ அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களையோ ஃபாலோ செய்வதில்லை. அதனால் இதைப் பற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை” என்று கூலாகப் பதிலளித்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்குவாரா இல்லையா என்பதை வெளிப்படையாகக் கூற மறுத்த ஸ்ரேயாஸ் ஐயர், தங்களின் ஆடும் லெவன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “எதிரணிக்கு எங்களுடைய உத்திகளை முன்கூட்டியே வெளிப்படுத்த முடியாது, இது அணியின் தனிப்பட்ட விஷயம்” என்று கூறிய அவர், அணியில் இருக்கும் மற்ற வீரர்களும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த அனுபவ வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்பது முக்கியம் என்றும், ஒவ்வொரு வீரருக்கும் தங்களின் திறமையை நிரூபிக்கப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் ஐயர் கூறினார்.
அதேநேரம், வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைப் பாராட்டிய கேப்டன், “அவர் ஒரு அற்புதமான திறமைசாலி, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிச்சயம் அவர் சர்வதேச அரங்கில் மிரட்டுவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இங்கிலாந்து தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அணி, சூர்யவன்ஷிக்கு வாய்ப்பளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
