அமெரிக்காவின் டல்லாஸ்  நகரில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அங்கிருந்த வளர்ப்பு நாய் ஒன்று தனது கூர்மையான உள்ளுணர்வால்  ஆபத்தை உணர்ந்து நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வீட்டின் வரவேற்பறையில் நாய் படுத்திருந்த போது, ஏதோ ஆபத்து நிகழப்போகிறது என்பதை அதன் ஆறாம் அறிவு முன்கூட்டியே எச்சரித்துள்ளது.

 

இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த நாய், உடனடியாக அங்கிருந்து அஞ்சி ஓடிய அடுத்த சில நொடிகளில், அந்த அறையின் ஒட்டுமொத்த மேற்கூரையும் பயங்கர சத்தத்துடன் அப்படியேதரைமட்டமாக இடிந்து விழுந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமராவில் பதிவான இந்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விலங்குகளுக்கு இயற்கை கொடுத்துள்ள அசாத்தியமான மோப்ப சக்தியும், ஆபத்துகளை முன்கூட்டியே அறியும் நுட்பமான உள்ளுணர்வும் எவ்வளவு வலிமையானது என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒருவேளை அந்த நாய் அங்கிருந்து நகர சில வினாடிகள் தாமதித்திருந்தாலும் அதன் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்பதால், சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பெரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

“விலங்குகளின் ஆறாம் அறிவு மனிதர்களை விடப் பல மடங்கு மேலானது” என்று உருகி வரும் நெட்டிசன்கள், அந்தப் பாசமான வளர்ப்பு நாய் எவ்விதக் காயமுமின்றி பத்திரமாக உயிர் தப்பியதை எண்ணி அதன் உரிமையாளருக்குத் தங்களது ஆறுதல்களையும், அந்த வாயில்லா ஜீவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.