கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அனைத்திலும் கட்டிங், கமிஷன், கரப்ஷன் மட்டுமே பிரதானமாக இருந்தது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், திமுகவுடன் இருந்த ஒன்பது ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்டு, தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அரசுக்குத் தங்கள் கட்சி முழு ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார். ஐந்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது ஏன் இதைக் கேட்கவில்லை எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கூட்டணியில் இருந்தபோது அதன் தர்மத்தைக் கடைப்பிடித்து அமைதி காத்தேன்; கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சனம் செய்வது எப்படி சரியாக இருக்கும்?” என்று வைகோ ஆவேசமாகப் பதிலளித்தார்.

தொடர்ந்து, செய்தியாளர் சிலர் தனிப்பட்ட முறையிலான பழைய விவகாரங்களைக் கிளப்பியதால் வைகோ கடும் அதிருப்தியடைந்தார். பத்திரிகையாளர்கள் மாநிலத்தின் முக்கியப் பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உள்நோக்கத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது என மறுத்து செய்தியாளருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதிமுகவினர் மற்றும் பத்திரிகையாளர்களிடையே ஏற்பட்ட இந்த திடீர் மோதல் போக்கின் காரணமாக, திருப்போரூர் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியதோடு செய்தியாளர் சந்திப்பும் பாதியிலேயே நிறைவடைந்தது.