சமீபத்தில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் தொடரில், அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய் முந்தடா இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலையச் செய்து அசத்தினார். இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை ரன் ஏதும் எடுக்கவிடாமல் டக்-அவுட் செய்தார்.

மேலும், இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரையும் 10 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். ராஜஸ்தானில் பிறந்து, தற்போதும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்துள்ள ஜெய் முந்தடா, கடந்த 2021-ஆம் ஆண்டு மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் முதுகலைப் படிப்புக்காக அயர்லாந்து சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சாதித்த ஜெய் முந்தடா, தற்பொழுது ஐடி  துறையில் வேலை தேடி வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு படிப்பை முடித்தவுடன் ‘இன்டெல்’ (Intel) தொழில்நுட்ப நிறுவனத்தில் திட்ட மேம்பாட்டு பொறியாளராக பணியில் சேர்ந்த அவர், கடந்த 2025-ஆம் ஆண்டு அந்த வேலையை விட்டு விலகியுள்ளார்.

தற்போது அவரது லிங்க்டின் (LinkedIn) பக்கத்தில் ‘ஓபன் ஃபார் வொர்க்’ (Open for Work) என்று குறிப்பிட்டு, தனது கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறன்களைப் பகிர்ந்துள்ளார். இதனால் கிரிக்கெட் உலகில் முத்திரை பதித்த ஜெய் முந்தடா, ஐடி துறையில் தனது பணியைத் தொடர்வாரா அல்லது கிரிக்கெட்டிலேயே தனது கவனத்தைச் செலுத்துவாரா என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.