இந்தியாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகன ஓட்டிகளின் ‘டிரைவிங் ஸ்கோர்’ வேகமாக சரிவதாகவும், இதனால் இரவு 9 முதல் 10 மணிக்குள் விபத்துகள் ஏற்படும் அபாயம் பெருமளவு அதிகரிப்பதாகவும் ‘ஜுனோ ஜெனரல் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் ‘இந்தியா ரோடு சேஃப்டி ரிப்போர்ட் (IRSR) 2026’ ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டின் 17 மாநிலங்களில் 45 லட்சம் பயணங்கள் மற்றும் 5.5 கோடி கிலோமீட்டர் தூர வாகன இயக்கத் தரவுகளை ஆய்வு செய்து இந்த அதிர்ச்சி முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு நேர்மாறாக, மதியம் 1 மணி முதல் 2 மணி வரையிலான நேரமே சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் பாதுகாப்பான நேரமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் நடக்கும் 80 சதவீதத்திற்கும் அதிகமான சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளின் தவறான நடத்தையும் கவனக்குறைவுமே காரணம் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதே வேளையில், பெண்கள் ஆண்களை விட மிகவும் பாதுகாப்பாகவும் பொறுப்பாகவும் வாகனங்களை ஓட்டுகிறார்கள் என்ற உண்மையை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது. பாதுகாப்பான ஓட்டுதலில் பெண்களின் சராசரி குறியீடு 92.86 ஆக உள்ள நிலையில், ஆண்கள் 92.43 புள்ளிகளுடன் சற்று பின்தங்கியுள்ளனர். இரவு நேர விபத்துகளைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது மற்றும் தூக்கம் வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நீண்ட தூரப் பயணங்களுக்கு முன்னதாக காரின் பிரேக், டயர்கள், என்ஜின் ஆயில் மற்றும் கண்ணாடிகளைச் சரிபார்ப்பதும், இருசக்கர வாகனங்களில் ஐஎஸ்ஐ (ISI) முத்திரை பெற்ற ஹெல்மெட் மற்றும் கார்களில் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாகும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.