சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கூட்டப்பட்டுள்ள இந்த மெகா மாநாட்டில், மாநிலத்தின் முக்கிய உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அதிகாரிகளுடன் அவர் நடத்தும் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்பதால், இது அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் ‘போதையில்லா தமிழ்நாடு’ போன்ற மிக முக்கியமான இலக்குகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் குற்றங்களை ஒடுக்கவும், போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் காவல்துறை மற்றும் நிர்வாகத் துறைக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பாதுகாப்பையும் பொது மக்களின் நல்வாழ்வையும் உறுதி செய்ய அரசு எடுக்கப் போகும் அடுத்தகட்ட அதிரடி ஆக்ஷன்களுக்கு இந்த மாநாடு ஒரு முக்கிய அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
