மகாராஷ்டிராவின் புசாவல் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ, தற்போது ஒட்டுமொத்த சோசியல் மீடியாவிலும் காட்டுத்தீயாய் பரவி ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், ரயில் நிலையத்திலிருந்து ரயில் மெதுவாக நகரத் தொடங்கியவுடன், அங்கிருந்த நாய் ஒன்று ரயிலின் கதவருகே வந்து தொடர்ச்சியாகக் குரைத்தபடி, ஓடும் ரயிலோடு சேர்ந்து தானும் அதிவேகமாக ஓடுகிறது. ரயிலின் திறந்த வாசலுக்கு அருகே ஆபத்தான முறையில் நின்றுகொண்டும், வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டும் பயணம் செய்த பயணிகளை எச்சரிப்பதற்காகவே அந்த நாய் அப்படிச் செய்ததாக வீடியோவைப் பார்த்த பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வாயில்லா ஜீவனின் உண்மையான நோக்கம் என்ன என்பதை யாராலும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், இந்த வீடியோ தற்போதைய ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான விவாதத்தை சமூக வலைத்தளங்களில் கிளப்பியுள்ளது. மனிதர்களுக்கு இருக்கும் பொது அறிவும், பொறுப்புணர்வும் கூட இல்லாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்களுக்கு, இந்த நாய் ஒரு மிகப்பெரிய பாடத்தை உணர்த்தியுள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். சில நேரங்களில் சட்டங்களும் மனிதர்களின் எச்சரிக்கைகளும் செய்யாத பலத்த தாக்கத்தை, மனித மொழி பேசத் தெரியாத ஒரு வாயில்லா ஜீவனின் செயல் மிக அழுத்தமாகச் செய்துவிடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
