சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேச மாட்டார் என்று விமர்சித்தவர்கள், அவர் பேசத் தொடங்கியவுடன் பயந்து எழுந்து ஓடிவிட்டனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துப் பேசியுள்ளார்.
ஆளுநர் உரையின் போது முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் எதிர்க்கட்சியினர் வெளியேறிய சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், முதலமைச்சர் அமைதியாக இருக்கும் வரை தான் மற்றவர்களுக்குப் பாதுகாப்பு என்றும், அவர் பேசத் தொடங்கினால் அறிவுப்பூர்வமான வார்த்தைகள் வந்து கொண்டே இருக்கும் என்றும் கூறினார்.
மேலும், சினிமாவில் உச்சகட்டத்தில் நடித்துக் கொண்டு ஆண்டுக்கு 250 கோடி முதல் 500 கோடிரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருந்தும், மக்கள் பணியாற்றுவதற்காக அந்தப் பணத்தையெல்லாம் தூசி போல எறிந்துவிட்டு வந்த தலைவரைப் பாராட்டிய அவர், தமிழ்நாட்டு மக்களும், பெண்களும் தான் பாதுகாக்கப்பட வேண்டிய உண்மையான பொக்கிஷங்கள் என்று குறிப்பிட்டார்.
தான் அரசியலில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த போது, தன் கரம் பிடித்துத் தூக்கிவிட்டுத் தற்பொழுது அமைச்சராக இருக்க வாய்ப்பளித்த தன் தலைவரின் மனிதநேயப் பண்பை அவர் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
தன்னை நேரில் அழைத்து “அம்மா படத்தை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள், அதுதான் எனக்குமகிழ்ச்சி” என்று தலைவர் பெருந்தன்மையுடன் கூறிய ரகசியத்தையும், அவரது எளிமையான உபசரிப்பையும் மேடையில் பகிர்ந்து கொண்டார்.
அனைவரது கருத்துகளையும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பொறுமையாகக் கேட்டு, உரிய மரியாதை அளிக்கும் பண்பு கொண்ட அவர் தான் நாட்டு மக்களுக்காகத் தற்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், மக்களின் நலனுக்காகத் தங்களது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடித் திட்டங்களை அறிவிக்கவுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் விரிவாக விவரித்துள்ளார்.
