அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5-வது மாடியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தின் போது, 18 வயது இளம் பெண் ஒருவர் காட்டிய அசாத்திய துணிச்சலும் சமயோசித புத்தியும், ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் உலக அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 5-வது மாடியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் திடீரென தீப்பிடித்து, வீடு முழுவதும் கரும்புகையும், நச்சு வாயுக்களும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளன. அந்த நேரத்தில் வீட்டில் 18 வயது சிறுமியும், அவளுடைய 7 மாதமே ஆன பச்சிளம் தம்பியும் (Cousin) மட்டுமே இருந்துள்ளனர்.

தப்பிக்க வழி தெரியாமல் ஒட்டுமொத்த வீடும் புகை மூட்டமாக மாறிய சூழலில், அந்தப் பெண் துளி கூட பதற்றமடையாமல் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். ​விஷம் கலந்த கரும்புகை தாக்கி குழந்தையின் மூச்சு திணறிவிடக் கூடாது என்பதற்காக, அந்த 18 வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்து, 5-வது மாடி ஜன்னலுக்கு வெளியே காற்றில் பாதுகாப்பாகத் தன் கைகளால் பிடித்துத் தொங்கவிட்டுள்ளார்.

தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தங்களை மீட்கும் வரை, கைகள் வலிக்க வலிக்க, மூச்சு முட்டும் புகை நடுவிலும் அந்தப் பெண் குழந்தையைத் தளராமல் ஜன்னலுக்கு வெளியே பிடித்துக் கொண்டே இருந்துள்ளார். மீட்புக் குழுவினர் விரைந்து வந்து இருவரையும் பத்திரமாக மீட்ட போதுதான் அங்கிருந்தவர்களின் உயிரே திரும்ப வந்துள்ளது. தனது உயிரைப் பணயம் வைத்து 7 மாத குழந்தையைக் காப்பாற்றிய அந்த 18 வயதுப் பெண்ணின் வீரத்தை நெட்டிசன்கள் உலக அளவில் பாராட்டித் தள்ளி வருகின்றனர்