மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையில், தங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) நேரடியாக உதவியதாக ஈரான் நாட்டின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலர் டாக்டர் கதீர் நெஜாமிபூர், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் உருவான நெருக்கடிக்கு அமெரிக்காவும் இஸ்ரேலுமே காரணம் என்றும், ஈரானின் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்கள் வசிக்கும் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமீரகம் தனது ராணுவத் தளங்களை பயன்படுத்த அனுமதித்ததோடு, தங்களுக்கு எதிராக நேரடியாகவும் களமிறங்கியது என்று ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், அண்டை நாட்டு நல்லுறவை மதித்து அமீரகம் அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இருப்பினும், ஈரான் முன்வைத்துள்ள இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) முற்றிலும் மறுத்துள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலீஃபா ஷாஹீன் அல் மாரர், ஈரானின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், சர்வதேச விதிகள் மற்றும் இறையாண்மையை எப்போதும் தங்கள் நாடு மதிப்பதாகவும் விளக்கமளித்தார். அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் நிலை தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் கட்டுக்குள் வந்திருந்தாலும், அமீரகத்தின் மீதான ஈரானின் இந்த நேரடி குற்றச்சாட்டு வளைகுடா நாடுகளில் புதிய ராஜதந்திர மோதலையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
