சுவிட்சர்லாந்தின் லேக் லூசர்ன் (Lake Lucerne) நகரில் உலக அமைதிக்காக நடைபெற்ற மிக முக்கியமான உயர்மட்ட அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அதிரடி மிரட்டலால் ஆத்திரமடைந்த ஈரான் தூதுக்குழு கூட்டத்தை விட்டு பாதியிலேயே அதிரடியாக வாக்-அவுட் (Walkout) செய்து வெளியேறிய விவகாரம் ஒட்டுமொத்த சர்வதேச அரங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிராந்திய பதற்றத்தைக் குறைக்கவும், அணுசக்தி விவகாரம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்தும் இஸ்லாமாபாத் ஒப்பந்தத்தின் (Islamabad MoU) கீழ் ஒரு நல்ல முடிவை எட்ட அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன. இதற்காகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் கத்தாரின் தூதர்கள் நடுநிலையாக நின்று பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இப்போதே ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் உங்கள் நாடே மிஞ்சாது” என்று ஈரானுக்குப் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது எந்தவொரு மிரட்டலோ, அழுத்தமோ தரக்கூடாது என்கிற முதல் விதியை அமெரிக்கா மீறிவிட்டதாகக் கூறி கொதித்தெழுந்த ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாப், அங்கிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வென்ஸை (JD Vance) நேருக்கு நேராக எச்சரித்துவிட்டு, அமெரிக்காவுடன் இணைந்து குரூப் போட்டோ (Photo session) எடுக்கவும் மறுத்துவிட்டுத் தனது குழுவுடன் அரங்கை விட்டு வெளியேறினார்.

அப்போது, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) அறைக்குள் நுழைந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை மட்டும் அன்போடு கட்டிப்பிடித்துவிட்டு, அருகில் அமர்ந்திருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வென்ஸைத் துளியும் மதிக்காமல் முகத்தைத் திருப்பிச் சென்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி அமெரிக்காவிற்கு நேர்ந்த மிகப்பெரிய ராஜதந்திர அவமானமாகப் பேசப்பட்டு வருகிறது.

ஈரானின் இந்த திடீர் அதிரடி முடிவால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் பதற்றமடைந்து, ஈரான் தரப்பைச் சமாதானப்படுத்த முயன்றனர். சுமார் 80 நிமிடங்கள் மூடிய அறைக்குள் நடந்த விவாதத்திற்குப் பிறகு, அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச முடியாது என்றும், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மூலமாக மட்டுமே பேச முடியும் என்றும் ஈரான் கறாராகக் கூறிவிட்டதால், அமெரிக்கா அனுப்பிய மறு பேச்சுவார்த்தை அழைப்பை ஈரான் அடியோடு நிராகரித்துவிட்டது.

உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்த சுவிட்சர்லாந்து அமைதி மாநாடு தற்போது ட்ரம்பின் ஒற்றை மிரட்டலால் மொத்தமாக முறிந்து, கடுமையான பதற்றத்திலும் நாடகக் காட்சிகளுடனும் முடிவடைந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.