இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணியின் இந்த இமாலய ஸ்கோருக்கு, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் ருத்ரதாண்டவமே முக்கியக் காரணமாக அமைந்தது. வெறும் 29 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர், 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் குவித்து இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

அதிலும் குறிப்பாக, வெறும் 11 பந்துகளில் அரைசதம் கடந்து, ‘ஏ’ பிரிவு கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் படைத்தார். அவர் அவுட்டாகி வெளியேறும்போது இந்திய அணி 8.5 ஓவர்களிலேயே 132 ரன்களைக் குவித்திருந்தது.

தொடக்க வீரர் வைபவ்வின் இந்த அசுர வேக ஆட்டத்திற்குப் பிறகு, கேப்டன் திலக் வர்மா அரைசதம் அடித்தார். இறுதி ஓவர்களில் அனுகுல் ராய் 15 பந்துகளில் 39 ரன்கள் விளாச, இந்தியா 377 ரன்களை எட்டியது. கடினமான 378 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பயணித்த இலங்கை ‘ஏ’ அணி, 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. லீக் சுற்றில் இரு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட ‘சூப்பர் ஓவர்’ மோதலின் போது வைபவ் சூர்யவன்சி சர்ச்சையில் சிக்கியிருந்ததால், இந்த இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், வைபவ் தனது பேட்டின் மூலமே இலங்கை அணிக்கு தகுந்த பதிலடி கொடுத்தார். போட்டிக்குப் பின் பேசிய இலங்கை கேப்டன் சஹான் ஆராச்சிகே, “பவர்பிளே ஓவர்களிலேயே வைபவ் எங்களை நிலைகுலையச் செய்துவிட்டார், அவர் ஆடிய ஆட்டத்திற்குப் பிறகு பேசுவதற்கு எங்களிடம் வார்த்தைகளே இல்லை” என்று வைபவ்வின் அசாத்திய பேட்டிங்கை பாராட்டிப் பேசினார்.