வங்கதேச அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி அதிரடியாகக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களின் விசித்திரமான கொண்டாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. வழக்கமாகத் தொடரை வென்றதும் கோப்பையுடன் ‘விக்டரி லேப்’ ஓடுவது அல்லது மேடையில் போஸ் கொடுப்பதற்குப் பதிலாக, ஆஸ்திரேலிய வீரர்கள் மைதானத்தில் இருந்த ஸ்பான்சர்களின் பைக்குகளை வைத்து ரகளை செய்துள்ளனர்.

 


ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் டிம் டேவிட் மற்றும் மேட் ஷார்ட் ஆகிய இருவரின் கண்ணிலும் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரகாசமான நியான் பச்சை நிற பைக் பட்டது. உடனே டிம் டேவிட் பைக்கின் ஹேண்டிலைப் பிடிக்க, மேட் ஷார்ட் பின்னால் அமர, இருவரும் பச்சைப் புல்வெளியில் பைக்கை ரேஸ் டிராக் போல அசுர வேகத்தில் ஓட்டி அட்ராசிட்டி செய்தனர். இவர்களுடன் வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸும் மற்றொரு பைக்கை எடுத்துக்கொண்டு மைதானத்தை வலம் வந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக, ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் மேடையில் ‘WINNERS’ போர்டுக்குப் பின்னால் கோப்பையுடன் அதிகாரப்பூர்வமாக புகைப்படம் எடுக்கத் தயாரானபோதும் இந்த வீரர்களின் ‘பைக் காதல்’ அடங்கவில்லை. ஒருபுறம் ஒரு வீரர் கருப்பு நிற பைக்கில் கெத்து காட்ட, மறுபுறம் டிம் டேவிட் அந்த நியான் பைக்கின் மீதே அமர்ந்துகொண்டு போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்தார். பின்னணியில் வாணவேடிக்கைகள் அதிர, கேப்டன் கையில் கோப்பையுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாலும், மேடையின் ஓரங்களில் நின்ற அந்த பைக்குகளும், அதன் மீதிருந்த கிரேஸி ஆஸ்திரேலிய வீரர்களும்தான் ஒட்டுமொத்த லைம்லைட்டையும் தட்டிச் சென்றனர்.

கிரிக்கெட்டில் வெற்றி, தோல்விகள் சாதாரணமானது என்றாலும், போட்டிக்குப் பிறகு வீரர்களின் இத்தகைய அழுத்தமற்ற, ஜாலியான அணுகுமுறை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தொடரை மட்டுமல்ல, தங்களின் இந்த கலகலப்பான கொண்டாட்டத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளது.