உலகில் எத்தனையோ அழகான உறவுகள் இருக்கலாம். ஆனால், ஒரு பெண் பிள்ளைக்கு அவளது வாழ்நாளின் முதல் ‘ரியல் லைஃப் சூப்பர் ஹீரோ’ அவளது அப்பாதான். அதேபோல், ஒரு ஆணின் வாழ்க்கையில் எப்போது பெண் குழந்தை பிறக்கிறதோ, அப்போதே அவன் தன் முரட்டுத்தனங்கள் அனைத்தையும் இழந்து விடுகிறான். உலகத்துக்கே கோபக்காரராக, டஃப்பான ஆளாக இருக்கும் ஆண்கள் கூட, தன் மகள் முன்னால் மண்டியிட்டு அவளது மழலைக்கு அடிமையாகிப் போவதுதான் உலகிலேயே ஆகச்சிறந்த அழகு!

​மகளின் சின்ன உலகமும்… அப்பாவின் பேரன்பும்!

​மகள் பிறந்தது முதல் அவளது ஒவ்வொரு நகர்விலும் பாசத்தோடு சேர்த்து, அவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற ஒரு வித பயத்தையும் சேர்த்தே சுமந்து திரிகிறார்கள் அப்பாக்கள். மகள் ஆசையாகக் கேட்கும் சின்ன சின்ன விஷயங்களைக்கூட, பார்த்துப் பார்த்துச் செய்வதில்தான் அவர்களுக்கு அசாத்திய சந்தோஷம் கிடைக்கிறது.

தனக்கு என்று ஒரு புதிய சட்டை எடுக்க பத்து முறை யோசிக்கும் அப்பாக்கள், தன் மகள் ஆசையாகக் கேட்கும் உடையையோ, பொருளையோ எப்படியாவது கடன் வாங்கியாவது உடனே வாங்கி வந்து கொடுத்துவிடுவார். தன் தேய்ந்து போன செருப்பைப் பற்றிப் கவலைப்படாமல், தன் மகளின் எதிர்காலத்தை அழகாகச் செதுக்குவதிலேயே தன் ஆயுளைக் கழிப்பவர்தான் அப்பா.

கள்களின் திருமணமும்… அப்பாவின் ரகசியக் கண்ணீரும்!

​ஒரு அப்பாவின் பாசம் ஒட்டுமொத்தமாக உடைந்து கொட்டும் இடம், அவளது திருமண மேடைதான். அதுவரை வீட்டில் மகாராணியாக, தன் கண் அசைவில் எல்லாவற்றையும் சாதித்த தன் செல்ல மகள், இனி இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழப் போகிறாள் என்ற அந்தப் பிரிவைத் தாங்க முடியாமல் உள்ளுக்குள் தவிப்பார்.

​கல்யாண மண்டபத்தின் மூளையில் யாருக்கும் தெரியாமல் தன் சட்டைக் காலரால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும் அப்பாவின் அந்த மௌன அழுகைக்குப் பின்னால் இருக்கும் வலி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. “என் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று இன்னொரு குடும்பத்திடம் கைகூப்பி அழும் அந்த நொடியில், எந்த ஒரு அப்பாவும் தோற்றுப் போவதில்லை; மாறாக, ஒரு பேரன்பின் சிகரமாக உயர்ந்து நிற்கிறார். வெளியில் காட்டும் கண்டிப்பு வெறும் வேஷம்தான், உள்ளுக்குள் இருப்பது மகளின் எதிர்காலத்தைப் பற்றிய பயமும், அளவிட முடியாத பாசமும்தான்.

உலகமே நம்மைப் பார்த்து “உன்னால் முடியாது” என்று சொல்லும்போது, “துணிஞ்சு நில்லு மா, நான் இருக்கேன்” என்று பின்னால் இருந்து தட்டிக்கொடுக்கும் ஒற்றை மனிதர் அப்பாதான். இந்த தந்தையர் தினத்தில், உங்களுடைய அப்பாவோடு அட்லீஸ்ட் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து பேசுங்கள், அல்லது ஒரு ரகசிய முத்தத்தைப் பரிசளியுங்கள். அதுதான் இந்த உலகத்து அப்பாக்களுக்கு மகள்கள் தரும் ஆகச்சிறந்த கிஃப்ட்!