லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் மிக முக்கிய கடல் வணிகப் பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் சனிக்கிழமை அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரானின் இந்த திடீர் முடிவானது, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த நிபந்தனைகள் குறித்து டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான தற்காலிக உடன்படிக்கையின்படி, 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான போக்குவரத்து கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய ஈரான் ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய சூழலில் இந்த ஒப்பந்தத்திலிருந்து ஈரான் முற்றிலும் பின்வாங்கியுள்ளதை இந்த நடவடிக்கை காட்டுகிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தியை நோக்கி வரும் அனைத்து சர்வதேசக் கப்பல்களுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதிக்குள் நுழையும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள IRGC, லெபனானில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் போர்நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியை மீறியதே இந்த ஜலசந்தியை மூடுவதற்குக் காரணம் என்று விளக்கமளித்துள்ளது.
எதிரி நாடுகள் தங்களது கடமைகளை நிறைவேற்றும் வரை இந்த எல்லைக் கட்டுப்பாடு தொடரும் என்றும், தாக்குதல்கள் நீடித்தால் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைகள் பாயும் என்றும் ஈரானின் உச்ச கூட்டு ராணுவ கட்டளை தலைமையகம் எச்சரித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கா தனது நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இறுதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை தொடரும் என ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெளிவுபடுத்தியுள்ளார்.
