ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பம்பனூர் சுப்ரமணியேஸ்வர சுவாமி கோயிலில், உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின் போது ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கோயிலின் உண்டியலைத் திறந்த அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் காணிக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த 20 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப் பார்த்தபோது, அதில் எழுதப்பட்டிருந்த வினோத வேண்டுகோள் அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த ரூபாய் நோட்டில், “சுவாமி, என் அத்தையின் தொல்லையை என்னால் தாங்க முடியவில்லை. அவர் விரைவில் இறந்துவிடும்படி பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ஒரு பக்தர் எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாகக் கோயில் உண்டியல்களில் பணம் மற்றும் நகைகளைக் காணிக்கையாகச் செலுத்தி நல்ல விஷயங்களை வேண்டிக் கொள்ளும் நிலையில், இவ்வாறு தனிப்பட்ட கோபத்தால் அத்தை இறக்க வேண்டும் என நோட்டில் எழுதிப் போட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது இந்த வினோத ரூபாய் நோட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இணையவாசிகளிடையே வேகமாகப் பரவி வருகிறது.
