தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21) என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், அண்மையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்தக் குழந்தைக்குப் பிறந்து வெறும் 54 நாட்களே ஆகின்றன. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக மதுமிதா கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதற்காக அவர் தொடர் சிகிச்சையும் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், வயிற்று வலி குணமாகாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய உறவினர்கள் மதுமிதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மதுமிதா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தாயை இழந்து பிறந்து 54 நாட்களேயான பச்சிளம் குழந்தை தவிக்கும் இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், உயிரிழந்த மதுமிதாவிற்குத் திருமணமாகி ஒரு வருடமே ஆவதால், தூத்துக்குடி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
