மராத்தி திரையுலகில் ‘சாவா’ (Chhava) திரைப்படத்தில் தாராபாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல இளம் மராத்தி நடிகையான சஞ்சிதா உகலே, வயது முப்பது வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த சினிமா வட்டாரத்தையும் நிலைகுலைய வைத்துள்ளது.
அவர் நாலாசோபாராவில் உள்ள தனது வீட்டில் பெற்றோர் மற்றும் 15 வயது தங்கையுடன் வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தைப் பயன்படுத்தித் தனது புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தை அடுத்து குடும்பத்தினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆச்சோலே காவல் நிலைய ஏபிஐ வினோத் பாக் கூறுகையில், சம்பவ இடத்தில் எவ்வித தற்கொலைக் கடிதமும் (Suicide Note) சிக்கவில்லை என்றும், நடிகையின் தந்தை அளித்த புகாரின் பேரில் தற்பொழுது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது மகளின் மரணத்தில் யாருடைய பின்னணியும் இல்லை என்றும், யார் மீதும் தங்களுக்கு எவ்வித புகாரும் இல்லை என்றும் அவரது தந்தை போலீசாரிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த இளம் வயதில் திறமையான ஒரு நடிகை எதற்காக இத்தகைய விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து போலீசார் தற்பொழுது தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சோகமான தகவல் சோசியல் மீடியா ஏரியாக்களிலும் காட்டுத்தீயாய் பரவி சினிமா ரசிகர்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
