கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவத் தாக்குதலைத் தொடங்கியபோது, இந்த யுத்தம் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ முடிவுக்கு வந்துவிடும் என்றே மாஸ்கோ தலைமை கணக்கு போட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த உக்ரைன் போர், மனித வரலாற்றின் மிகக் கொடூரமான போர்களில் ஒன்றான ‘முதலாம் உலகப் போரின்’ கால அளவை விடவும் அதிக நாட்கள் நீடித்து, ரஷ்யாவிற்கு ஒரு தேவையற்ற வரலாற்று மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ராணுவத்தின் கடுமையான எதிர்ப்பினாலும், மேற்கத்திய நாடுகளின் அதிநவீன ஆயுத உதவிகளாலும் இந்த போர் முடிவில்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. இந்த நீண்டகாலப் போரினால் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, உலகப் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் தலைநகர் கீவைக் கைப்பற்றி மிக எளிதாகப் பிரம்மாண்ட வெற்றி விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போதைய களநிலவரம் ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. உக்ரைனின் ஆளில்லா விமானங்கள்தற்போது ரஷ்யாவின் எல்லைகளுக்குள் புகுந்து எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ராணுவ தளங்கள் மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தி புதினின் ராணுவ பலத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. இந்த நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர சர்வதேச அளவில் பல்வேறு அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ரஷ்யா தனது பிடிவாதமான போக்கைக் கைவிடாததால் உலகப் போரையே மிஞ்சிய இந்த விபரீதப் போர் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற அச்சமும் பதற்றமும் உலக நாடுகளிடையே தொடர்ந்து நீடிக்கிறது.