மானாமதுரை தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன், தனது மகள் தேவமித்ராவை திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர்த்துள்ளார். ஏற்கனவே அவரது மகள் 5-ஆம் வகுப்பு வரை அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வந்த நிலையில், தற்போது இளங்கோவன் எம்.எல்.ஏ-வாகத் தேர்வான பின்பும் கூட, தனது மகளின் கல்வியை தொடர்ந்து அரசுப் பள்ளியிலேயே தொடரச் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதியாக உயர்ந்த பின்பும், அரசுப் பள்ளி மீது நம்பிக்கை வைத்து அவர் எடுத்துள்ள இந்த முடிவு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் கூறுகையில், “நானும் அரசுப் பள்ளியில்தான் படித்து வளர்ந்தேன். எனவே, எனது மகளும் அரசுப் பள்ளியிலேயே படித்து கல்வி பயில வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வரும் சூழலில், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையையும் அதிகரித்துள்ளது.