தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநரும் ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 84-வது வயதில் சென்னையில் இன்று காலமானார். ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த தமிழ்ப் படப்பிடிப்புகளை கிராமங்களின் திறந்தவெளிக்கும், மண்வாசனை மாறாத எதார்த்தமான மனிதர்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை இவரையே சேரும்.
மேலும் “என் இனிய தமிழ் மக்களே…” என்ற அவரது கணீரென்ற குரலும், ’16 வயதினிலே’, ‘முதல் மரியாதை’, ‘கிழக்கே போகும் ரயில்’ போன்ற காவியப் படைப்புகளும் என்றும் தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவை ஆகும். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும்.
இந்நிலையில் அவரது மறைவுக்குத் திரையுலகினரும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மாபெரும் திரையுலகப் பொக்கிஷமான இயக்குநர் பாரதிராஜாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, தயாரிப்பாளர் சங்கம் நாளை நடைபெறவிருந்த அனைத்துத் தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
