இந்திய கிரிக்கெட் அணிக்கு 2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த நட்சத்திர கேப்டன் சூர்யகுமார் யாதவின் கேப்டன் பதவி அதிரடியாகப் பறிக்கப்பட்டதோடு, அவர் இந்திய டி20 அணியில் இருந்தே முற்றிலுமாக நீக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் ரகசியத் தகவல்கள் தற்பொழுது வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் ஒரு கேப்டனாகச் சிறந்த சாதனைகளைப் படைத்திருந்தாலும், சமீபகாலமாக ஒரு பேட்ஸ்மேனாக அவரது ஆட்டம் மிகவும் மோசமடைந்ததே அவர் அணியை விட்டு தூக்கப்பட முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி மற்றும் 2028 டி20 உலகக்கோப்பை வரை இந்திய அணியை வழிநடத்த தனக்கு ஆசையிருப்பதாக சூர்யா பொதுவெளியில் அறிவித்தது, இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அணியில் நீடிப்பதும், கேப்டனாக இருப்பதும் ஐபிஎல் தொடரின் ஃபார்மை பொறுத்தே அமையும் என கம்பீர் சூர்யாவிடம் கறாராகக் கூறியிருந்த நிலையில், ஐபில்  2026 தொடரில் சூர்யா வெறும் 20.77 சராசரியுடன் 270 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். இது 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு சூர்யாவின் மிக மோசமான பேட்டிங் ஃபார்ம் என்பதால், அவரை கேப்டன் பதவியில் இருந்து மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 அணியில் இருந்தே நீக்க வேண்டும் எனத்  குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் கம்பீர் திட்டவட்டமாகப் புகார் அளித்துள்ளார்.

புதிய கேப்டன் பதவிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இரண்டு பெயர்களை கம்பீர் பரிந்துரைத்த போதிலும், அஜித் அகர்கர் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரை பலமாக முன்மொழிந்ததால், இறுதியில் பிசிசிஐ (BCCI) ஆலோசனையின்படி ஸ்ரேயாஸ் ஐயரை புதிய டி20 கேப்டனாக நியமிக்க இருவரும் ஒருமனதாகச் சம்மதித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்தே சூர்யாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த கம்பீர், தற்பொழுது பயிற்சியாளராக எடுத்த இந்த அதிரடி மற்றும் கண்டிப்பான முடிவு, நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.