மும்பை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் லோக்கல் ரயிலில், இருக்கைக்காக பெண்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமாக சண்டையிட்டுக் கொண்ட நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் கூட்ட நெரிசலாக காணப்படும் மும்பை ரயிலில், பயணம் செய்த சில பெண்களுக்கு இடையே திடீரென இருக்கை பிடிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் அடுத்த சில நிமிடங்களிலேயே எல்லை மீறி, ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்ளும் அளவிற்கு வன்முறையாக மாறியுள்ளது.
ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே, பெண்கள் ஒருவரையொருவர் சரமாரியாகக் கன்னத்தில் அறைந்து கொண்டும், தலைமுடியைப் பிடித்துக் கொடூரமாக இழுத்துக் கொண்டும் சண்டையிட்டுள்ளனர். ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அவர்களைத் தடுக்க முயன்றும், ஆக்ரோஷத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சக பயணிகளால் மொபைல் போனில் படம் பிடிக்கப்பட்ட இந்த அதிர்ச்சியூட்டும் மோதல் வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பார்ப்பவர்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளதுடன், ரயில்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
