திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று (ஆகஸ்ட் 28) 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 28-ஆம் தேதியில்தான் அவர் திமுகவின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தனது தலைவர் பயணத்தின் 9-வது ஆண்டு தொடங்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், திமுக அமைப்பில் மாபெரும் மறுசீரமைப்பைச் செய்யப் போவதாக முக ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “2018-இல் இதே நாளில்தான் நான் திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றேன். காலத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளாத எந்தவொரு விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை என்பதுதான் இயற்கையின் விதி. அந்த உயிரியல் தத்துவத்திற்கு ஏற்ப, தலைவர் பொறுப்பில் 9-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சுபநாளில், கட்சியிலும் அப்படிப்பட்ட ஒரு பெரிய மாற்றத்தையும் மறுசீரமைப்பையும் அறிவித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மறுசீரமைப்பு மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் மாபெரும் வெற்றிப் பாதைக்கு நான் உறுதியாக அழைத்துச் செல்வேன்” என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்களை எதிர்கொள்ளும் வகையில், கட்சி நிர்வாகத்தில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கவும், சுறுசுறுப்பற்ற நிர்வாகிகளை மாற்றவும் இந்த மறுசீரமைப்பு திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக தலைவராக 8 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள முக ஸ்டாலினின் இந்த திடீர் மறுசீரமைப்பு அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மற்றும் உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அதேவேளையில், கட்சியில் எந்தெந்த பொறுப்புகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்படப் போகிறார்கள் என்ற பரபரப்பும் திமுக வட்டாரத்தில் தொற்றிக் கொண்டுள்ளது.
