இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் எளிதில் அழுக்காவதையும், கிழிந்து போவதையும் தடுத்து, கரன்சி அச்சிடும் செலவைக் குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி (RBI) விரைவில் ‘பாலிமர்’ எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தப் புதிய பைலட் ப்ராஜெக்ட்டை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் தினசரி அதிகமாகப் புழங்கும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்துவிடுவதால், முதற்கட்டமாக இந்த குறைந்த மதிப்புள்ள நோட்டுகளையே பிளாஸ்டிக் வடிவில் கொண்டு வர மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆர்பிஐ தீவிரமாக ஆலோசித்துள்ளது.

கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் ரூபாய் நோட்டுகள் அச்சிட ஆர்பிஐ சுமார் 4,875 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், இந்த பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், எதிர்காலத்தில் இந்த அசுரத்தனமான செலவு பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ​ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் இதற்கான முதற்கட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தத் திட்டம் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை சாதாரணமாக மடிக்க முடியும் என்பதுடன், இவை தண்ணீர் மற்றும் அழுக்கால் பாழாகாது என்பதால் மிகவும் சுகாதாரமானவை என்றும், கள்ள நோட்டுகளை அச்சிட முடியாத அளவுக்கு அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். உலகிலேயே முதன்முதலில் 1988-ல் ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்திய இந்த பாலிமர் நோட்டுகளை இப்போதைய டிஜிட்டல் யுகத்தில் இந்தியாவிலும் முழுமையாகக் கொண்டு வர ஆர்பிஐ காய் நகர்த்தி வரும் வேளையில், கரன்சி அச்சடிப்பு மற்றும் கிழிந்த நோட்டுகளை அழிப்பதற்கான செலவுகள் இனி மொத்தமாக மாறும் என வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.